லண்டனிலுள்ள இந்திய தூதரகம் எதிரே பாகிஸ்தானியர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலமானது ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக்  என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.  இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

 இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பான தகவல் மற்றும் வீடியோ பதிவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்த வன்முறைப் போராட்டத்திற்கு லண்டன் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விடயத்தில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இதேபோல் கடந்த மாதமும் இந்திய தூதரகம் எதிரே பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டு கொடிகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.