இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான அஷஸ் தொடரின் நான்காவது போட்டி இன்றைய தினம் மான்சஸ்டர் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் பேர்மிங்கமில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. 

இதன் பின்னர் லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்று முடிந்த மூன்றாவது போட்டியில் பென் ஸ்டோக்ஸின் அசத்தலான ஆட்டத்தினால் இங்கிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது.

இதனால் 1-1 என இந்த தொடர் தற்போது சமனில் உள்ளது. இந்நிலையில் 4 ஆவது டெஸ்ட் போட்டி மான்சஸ்டர் மைதானத்தில் ஆரம்பமாகிறது. 

இப் போட்டிக்காக இரு அணிகளுளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அவுஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்ஸனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மோசமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா, அதிரடியாக நீக்கப்பட்டு காயத்தால் விலகிய முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் திரும்பியுள்ளார். மேலும் ஸ்மித்துக்கு மாற்று வீரராக களமிறங்கிய லாம்பஷே 3 ஆம் நிலை வீரராக களமிறக்கப்படுகிறார்.

இதேதேவளை இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு கிரெய்க் ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். அதுபோன்று வீரர்கள் வரிசையில், தொடக்க வீரர் ஜோசன் ரோய் நடுவரிசைக்கும், அங்கிருந்த ஜோ டென்லி தொடக்க வீரராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.