(இராஜதுறை ஹஷான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே தேசிய அரசாங்கத்தில் இணைந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் அவரே இது சாத்தியமில்லை என்று கருதினார்.

காரணம் ஐ.தே.க வுடன் எவ்வகையிலும் ஒத்துப்போக முடியாது என தெரிவித்த சுதந்திர கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் சிறிபால டி சில்வா , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 19 ஆம் திருத்திற்கு எம் ஆதரவை பெற்று எமக்கு துரோகமிழைத்து விட்டார் எனவும் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இன்று கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 68 ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகிறது. கட்சி ஸ்தாபகரான பண்டாரநாயக்கவிற்கு குருணாகலில் இடம்பெற்ற கூட்டத்தின் போது கட்சிக்குள்ளேயே ஆபத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. 

எனினும் அவர் அதற்கு இலக்காகவில்லை. அதில் பின்னடையாது ஸ்ரீங்கா சுதந்திர கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக அவர் உழைத்தார். அதே போன்று அவரைத் தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் கட்சியைக் கட்டியெழுப்பினார்.

 அவரால் சுதந்திர கட்சி பாதுகாக்கப்பட்டதன் காரணமாகவே அவரைத் தொடர்ந்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கும் , எமக்கும் அரசியல் பயணத்தைத் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. இதனை நாம் நினைவு கூற வேண்டும் என அவர் தெரிவித்தார்.