19வது திருத்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கு இருந்த அதிகாரங்கள் பிரிக்கபட்டமையே இந்த அரசாங்கத்தை சீராக நடத்த முடியாமைக்கு காரணம் என்று முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கதாதன் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தல் தொடர்பாக இன்றையதினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மாகாணசபை தேர்தல் நடக்க வேண்டும் என்பது ஜனநாயக உரிமை. அது நடக்காமல் இருப்பதற்கு தற்போது ஆட்சியில் இருக்கும் இழுபறி அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிலும் 19 வது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளை தொகுதி வாரி முறையில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக எல்லை நிர்ணய குழு ஒன்று அமைக்கபட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளபட்ட நிலையில் அந்த குழு பூரணப்படுத்தபட்ட அறிக்கையினை இன்னமும் வழங்கவில்லை.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜேர்மன் நாட்டின் நடைமுறையை பின்பற்றி கலப்பு தேர்தல் முறை ஒன்றை உருவாக்கி எப்படி கையை சுட்டு கொண்டார்களோ அது போலவே இந்த எல்லை நிர்ணய விடயத்திலும் பல திருப்திகரமற்ற நிலையே நீடித்து வருகின்றது. எனவே அது நிச்சயமாக மாற்றபட வேண்டும்.

அத்துடன் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் படிப்பினைகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான பெரிய கட்சிகள் தொகுதி வாரி தேர்தல் முறையினை வேண்டாம் என்றும் பழைய முறையிலேயே தேர்தலை நடத்துமாறும் வற்புறுத்தி கொண்டிருக்கிறார்கள்.

எனவே பழைய முறை தேர்தல் மாற்றபட வேண்டுமாக இருந்தால் இரண்டில், இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்திலே சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். இந்தவிடயங்களை அறியாமல் ஜனாதிபதி உயர்நீதிமன்றம் வரைக்கும் சென்றது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை. 

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகிந்த ராஜபக்ஷ உட்பட சில கட்சி தலைவர்கள் நினைத்தால் இது ஒரு சின்னவிடயம். 19 வது திருத்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றுக்கு இருந்த நாட்டின் அதிகாரங்கள், ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகிய மூவருக்கும் பிரித்து கொடுக்கபட்டமையினாலேயே இன்று இந்த அரசாங்கத்தை நடத்த முடியாமல் பல பிரச்சினைகளை சந்தித்து நிற்கின்றமைக்கு காரணம் என மேலும் தெரிவித்தார்.