இணை இன்றி தவிக்கும் இளைஞர்களை திருமண பந்தத்தில் இணைப்பதற்காக, சீனாவில் காதல் ரயில் எனும் பெயரில் பிரத்யேக ரயில் ஒன்றை அரசு இயக்கி வருகிறது.

இந்த ரயிலுக்கு, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சீனாவில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 20 கோடி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் திருமணம் ஆகாமல் இருப்பதும், அவர்களுக்கான வாழ்க்கைத் துணை கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்திய சீன அரசு, ,இளைஞர்களின் துயரை போக்குவதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி, 'காதல் ரயில் 'என்ற பெயரில் இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்காக பிரத்யேக ரயில் ஒன்றை சீன அரசு உருவாக்கியது.

10 பெட்டிகளுடன் கூடிய இந்த ரயில், சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள சோங்கிங் நகரில் இருந்து, தெற்கில் உள்ள க்யான்ஜியாங் நகரம் வரை செல்லும். 3 நாட்கள் பயணமாகும் இந்த ரயிலில் 1,000 பேர் பயணிக்கலாம். உணவுக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், நவீன விளையாட்டு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த ரயிலில் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் இந்த ரயில், பயணிகளுக்காக ஒவ்வொரு இடத்திலும் தலா 2 மணிநேரம் நிற்கும். இந்தப் பயணத்தின்போது, அவரவர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை அவரவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இத்தனை சிறப்பம்சம் பொருந்திய இந்த ரயில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்த காதல் ரயில், இதுவரை 3 பயணங்களை மட்டுமே மேற்கொண்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்த 3,000 பேரில், 10 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவில் உள்ள இளைஞர்களுக்கு இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால்,  இத்தனை சிறப்பம்சம் பொருந்திய காதல் ரயில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படுவதுதான்.