(ப.பன்னீர்செல்வம்)

பதிமூன்றுக்குள் சமஷ்டியை வழங்க வேண்டுமென்பதை திணிக்கவே ஜனாதிபதிக்கும் - சம்பந்தனுக்கும் ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்தது என குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார,  ஜனாதிபதி இந்தியாவையும், பிரதமர் சீனாவையும் சமாளிக்கும் ராஜதந்திரத்தையே அரசு முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பா அவர் மேலும் தெரிவிக்கையில், 

எமது நாட்டை பிரிக்கும் நிகழ்ச்சி நிரலிலிருந்து இன்னும் இந்தியா விடுபடவில்லை. அதனை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. 

13 ஆவது திருத்ததிலுள்ள காணி பொலிஸ் அதிகாரங்களை வடமாகாண சபைக்கு பெற்றுக் கொடுப்பதே இந்தியாவின் தேவையாகும். இதனூடாக சமஷ்டியை பெற்றுக் கொடுப்பதற்கான அடித்தளத்தை போட்டு பின்னர் படிப்படியாக தமிழீழம் உருவாகும். இதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும், இந்தியாவின் தேவையை திணிப்பதற்குமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனையும் ஒரே நேரத்தில் இந்தியாவிற்கு வரவழைத்தனர். 

இதன் மூலம் இந்தியாவின் தேவைகளை அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் இலங்கையில் நிலை நிறுத்திக் கொள்ளப்படும்.