நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22 ம் திகதி விண்ணில் ஏவியது.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் முக்கிய பாகமான விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டரை தனியாக பிரிப்பதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மிக சவாலானதாக கருதப்பட்ட லேண்டரை சந்திரயான் 2 ல் இருந்து நேற்று  (செப்.,02) பிற்பகல் 1.16 மணிக்கு  இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரித்தனர்.

சந்திரயான் -2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை உயரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுக்கு மிக அருகில் விக்ரம் லேண்டர் பயணித்துக் கொண்டிருக்கிறது.

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் விக்ரம், செப்.,7 அன்று நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்கும்.