ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 என அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் என்ற பெருமையை இலங்கை அணி வீரர்கள் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவான் முத்தையா முதரளிதரன் 800 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 708 விக்கெட்டுக்களுடன் ஷேன் வோர்ன் இரண்டாவது இடத்திலும், 619 விக்கெட்டுக்களுடன் அனில் கும்ப்ளே மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டிலும் முத்தையா முரளிதரன் 534 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், வஸிம் அக்ரம் 502 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்திலும், வக்கார் யூனிஸ் 416 விக்கெட்டுக்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

இருபதுக்கு - 20 கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க 99 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், அப்ரீடி 98 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்திலும், சஹிப் அல்ஹசன் 88 விக்கெட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் நியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் லசித் மலிங்க இன்னும் ஓர் விக்கெட்டினை கைப்பற்றினால், 100 விக்கெட்டுக்களை இருபதுக்கு -20 அரங்கில் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.