மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 257 ஓட்டங்களினால் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் ஒருநாள், இருபதுக்கு - 20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளைாயடி வருகிறது.

இதில் ஏற்கனவே இருபதுக்கு - 20 மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதேவேளை கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம் திகதி நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி 318 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றிருந்தது.

இந் நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியானது கடந்த 30 ஆம் திகதி ஜமேக்காவில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் ஹோல்டர் களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 416 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ஹனுமா விஹாரி 16 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 111 ஓட்டத்தையும், விராட் கோலி 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 76 ஓட்டங்களையும், மயங்க் அகர்வால் 55 ஓட்டங்களையும், இஷாந்த் சர்மா 57 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஜோசன் ஹோல்டர் 5 விக்கெட்டுக்களையும், ரஹ்கீம் கோர்ன்வால் 3 விக்கெட்டுக்களையும், பிரித்வெய்ட் மற்றும் கேமர் ரோச் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை எதிர்கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணி 117 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்டுக்களை இழந்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் சிம்ரன் ஹெட்மேயர் மாத்திரம் 34 ஓட்டங்களை அதிகபடியாக பெற ஏனைய வீரர்கள் அனைவரும் சொப்ப ஓட்டத்துக்குள் ஆட்டமிழந்தனர். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 6 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஷமி 2 விக்கெட்டுக்களையும், ஜடேஜா மற்றும் இஷாந் சர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுள் அணிக்கு பலோவன் வழங்காமல் 299 ஓட்ட முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 57 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

மயங்க் அகர்வால் 4 ஓட்டத்துடனும், லோகேஷ் ராகுல் 6 ஓட்டத்துடனும், விராட்கோலி டக்கவுட்டுடனும் புஜாரா 27 ஓட்டத்துடனும்  அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 

5 ஆவது விக்கெட்டுக்கு ரஹானே-ஹனுமா விஹாரி ஜோடி நிலைத்து நின்று ஆடி 111 ஓட்டங்களை திரட்டியது.

இந்திய அணி 2 ஆவது இன்னிங்சில் 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ரஹானே 64 ஓட்டத்துடனும், ஹனுமா விஹாரி 53 ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கேமர் ரோச் 3 விக்கெட்டுக்களையும் ஹோல்டர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இதன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு 468 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 3 ஆவது நாள் ஆட்டம் முடிவில் 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து இருந்தது. 

தொடக்க ஆட்டக்காரர்கள் கேம்ப்பெல் 16 ஓட்டத்துடனும், பிரித்வெய்ட் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, டேரன் பிராவோ 18 ஓட்டத்துடனும், ஷமார் புரூக்ஸ் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இந் நிலையில் நேற்றைய நான்காம் நாளில் 45 ஓட்டத்துடனும் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. டேரன் பிராவோ, புரூக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களைஎடுத்தனர்.  

இந்த ஜோடியில் டேரன் பிராவோ 23 ஓட்டம் இருக்கையில் காயம் காரணமாக வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய புரூக்ஸ் அரை சதத்தை கடந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 210 ஓட்டங்களுக்குள் சலக விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இந்திய அணியின் சார்பில் மொஹமட் ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதன் மூலம் இந்திய அணி 257 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது.

 

போட்டியின் ஆட்ட நாயகனாக தனது ‘கன்னி’ சதத்தை பதிவு செய்த ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார் (28 வெற்றி). 

அத்துடன் டெஸ்ட் தரவரிசையிலும் இந்திய அணி 120 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.