Published by R. Kalaichelvan on 2019-09-03 11:11:06
இலங்கைக்கு தமிழ்க் குடும்பம் ஒன்றை நாடு கடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவுஸ்தி ரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் நேற்றுமுன்தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

நடேசலிங்கம் – பிரியா தம்பதிகள் மற்றும் அவர்களின் 4 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை நாடுகடத்துவதில் அவுஸ்ரேலிய அரசு விடாப்பிடியாக உள்ளது.
கடந்த சனிக்கிழமை தனி விமானத்தில் ஏற்றப்பட்ட இந்தக் குடும்பத்தினரை, இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விமானம் புறப்பட்ட பின்னர் நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவினால் அந்த விமானம் மீண்டும் டார்வினுக்குத் திருப்பப்பட்டது.
இதையடுத்து, அந்த தமிழ் குடும்பத்தினர், கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவர்களை நாடு கடத்தக் கூடாது என வலியுறுத்தி நேற்றுமுன்தினம் அவுஸ்ரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் ஆயிரக்கணக்காக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
எனினும், இந்தப் போராட்டங்களை நிராகரித்துள்ள அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன், தமிழ் குடும்பத்தினரின் நாடு கடத்தலை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதியும் கிறிஸ்மஸ் தீவுக்கு குடியேற்றவாசிகளின் படகு ஒன்று வந்ததை சுட்டிக் காட்டியுள்ள அவர், இவர்களை தங்க அனுமதிப்பதானது அவுஸ்ரேலியாவின் எல்லை பாதுகாப்பு கொள்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.