உயிரிழந்த விடுதலைப் புலி போராளிகளை நினைவு கூருவதற்கு சந்தர்ப்பம் அளிக்க இயலாது . ஆனால், போரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூருவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போர் நிறைவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 7 வருடங்கள் பூர்த்தியாகின்றன. வடக்கில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நலையில் தெற்கிலும் போர் வெற்றியை நினைவு கூர்ந்து ஆளும் மற்றும் கூட்டு எதிர்க் கட்சியினர் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி உள் நாட்டுப் போர் முடிவடைந்ததாக அப்போதைய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்புல் விடுக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் உயிரிழந்தவர்களுக்காக உறவினர்கள் வீடுகளிலும் மயானங்களிலும் பல நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதற்கு எதிராக கடந்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைளை முன்னெடுத்தது .

இந் நிலையில் போரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூருவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலிப் போராளிகளை நினைவு கூருவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது . இறுதிக்கட்ட போரின் போது அடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த பொது மக்களை அவர்களது உறவினர்கள் நினைவு கூர்ந்து அஞ்சலிகளை செய்ய எவ்விதமான தடையும் கிடையாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.