ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில் அத்தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்தோட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெலிங்டன் தோட்டத்தில் நபர் ஒருவர் இனறு காலை புல் வெட்ட அப்பகுதிக்கு சென்ற வேளையில் சடலங்கள் தோண்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பில் ஊர் மக்களுக்கும் அறிவித்த அந்நபர் ஹட்டன் பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதில் 24, 68, 70 ஆகிய வயதுகளுடைய உடலங்களில் எச்சங்கள் அங்கிருந்து எடுத்து சென்றுள்ளதாகவும், அனேகமாக மண்டை ஓடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் ஒரு சடலம் புதைக்கப்பட்டிருந்த குழியை தோண்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெலிங்டன் தோட்டத்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.