அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத அறிவியல் புனைவு கதையில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.

தில்லுக்கு துட்டு 2, ‘A 1’ ஆகிய படங்கள் சந்தானத்திற்கு வசூல் ரீதியிலான வெற்றியையும், சந்தை மதிப்பையும் ஏற்படுத்தியது. இதனால் அவர் தற்பொழுது ‘டக்கால்ட்டி ’மற்றும் இயக்குனர் ஆர். கண்ணனின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கவிருக்கும் பெயரிடப்படாத அறிவியல் புனைவு கதையில் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் யோகி பேசுகையில்,‘ இந்த படத்தின் திரைக்கதையை எழுதும்போது நடிகர் சந்தானத்தை மனதில் வைத்துதான் எழுதினேன். மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், கொமடியனாகவும் ஒரே கதாபாத்திரம் பயணிக்கும். அந்த கதாபாத்திரங்களைக் கேட்டுவிட்டு, சந்தானம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

நவம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” என்றார்.  இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் கார்த்திக் யோகி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய‘ மாநகரம்’ என்ற படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சந்தானம் நடிப்பில் தயாராகி, கிடப்பில் இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.