இந்தியாவின் ஆந்திர மாநில கவர்னருக்கு தாய் ஒருவர் ‘மனநலம் குன்றிய தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என,  கடிதம் எழுதியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குறித்து மேலும் தெரியவருகையில், இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்வர்ணலதா. என்பருக்கு, ஜான்வி எனும் ஒரு மகள் உள்ளார். ஜான்விக்கு 4 வயது முதல் உளவியல் பிரச்சினையும், 8 வயது முதல் ஜினிக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜான்வியின் தந்தை உதவியாளராக பணிபுரிந்து வரும் வைத்தியசாலையில் ஜான்விக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த வைத்தியசாலையின் உளவியல் துறை புதிய தலைமை வைத்தியராக ராஜ்ய லட்சுமி என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

ராஜ்ய லட்சுமி வந்த பிறகு, ஜான்விக்கு வழங்கப்பட்டு வந்த சிகிச்சை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த ஸ்வர்ணலதா, தனது வேதனையை வெளிப்படுத்தி ஆந்திர மாநில கவர்னர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது; “எனது மகள் ஜான்வி 4 வயது முதலே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், என் கணவர் வைத்திய உதவியாளராக பணிபுரியும் வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக ஜான்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சமீபத்தில் அங்கு தலைமை மனநல வைத்தியராகப் பொறுப்பேற்ற வைத்தியர் ராஜ்யலட்சுமி என்பவர், எனது மகளுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது என மறுத்துவிட்டார். 

என் மகள் வலியால் துன்பப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. இதனால், அந்த வைத்தியர் மீது உரிய நடவடிக்கை எடுங்கள், அல்லது எனது மகளை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்” என அதில் கூறியுள்ளார்.

முறையான சிகிச்சை மறுக்கப்பட்டதால், பெற்ற தாயே தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு கவர்னருக்கு கடிதம் அனுப்பிய சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.