இந்தியாவின், ஏரிக்கரையில் கடந்த 27-ம் திகதி வாலிபர் ஒருவரை சிலர் கொலை செய்து புதைத்ததாகத் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பொலிஸார் குறித்த இடத்தில் நீண்ட நேரமாகத் தேடியும் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இதனால் தேடுதல் பணியை விட்டுவிடலாம் எனச் சில பொலிஸார் கருதியபோது, இரத்தத் தூளிகள் சிந்தியபடி ஒருவரை ஏரிக்கரையின் முட்புதர் அருகே இழுத்துச் சென்றதற்கான தடயங்கள் காணப்பட்டன. பொலிஸார் அதைப் பின்தொடர்ந்து சென்றபோது, தோண்டப்பட்ட குழியில் பாதி மணல் மூடப்பட்ட நிலையில் ஒருவர் புதைக்கப்பட்டிருந்தார். அதை பொலிஸார் தோண்டி எடுத்தனர். அப்போது உடல் முழுவதும் இரத்தக்காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டனர்.

பின்னர், அரசு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்த பொலிஸார், கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் மகேஷ்குமார் (20) என்று தெரியவந்தது. இவர், மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்த பொலிஸார் அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், "மகேஷ்குமார், வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார். குடும்பத்தோடு திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் அவர் வசித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்புதான் மேல்நல்லாத்தூருக்கு மகேஷ்குமார் குடும்பத்தினர் வந்துள்ளனர். மகேஷ்குமார், ஒரு பெண்ணைக் காதலித்துவந்துள்ளார்.
அந்தப் பெண்ணை மகேஷ்குமாரின் நண்பர் ஒருவரும் விரும்பியுள்ளார். இதனால் மகேஷ்குமாரிடம் அந்தப் பெண்ணைக் காதலிக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் மகேஷ்குமார், காதலை கைவிடவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நண்பர்களுடன் சேர்ந்து மகேஷ்குமாரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த 27-ம் திகதி மகேஷ்குமாரை மதுஅருந்த ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போதையில் இருந்த மகேஷ்குமாரிடம் அந்தப் பெண்ணைக் காதலிக்காதே, மறந்துவிடு என்று கூறியுள்ளனர்.
அதற்கு மகேஷ்குமார், அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். என்னால் அவளை மறக்க முடியாது. அந்தப் பெண்ணும் என்னைத்தான் காதலிக்கிறாள் என்று கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில்தான் மகேஷ்குமாரை அவரின் நண்பர்கள் அடித்துக் கொலை செய்து சடலத்தை ஏரிக்கரையில் புதைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிலர் அதைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
எழும்பூர் நீதிமன்றத்தில் மகேஷ்குமாரின் நண்பர்கள் அஜித்குமார், சிவா என்கிற சிவசங்கரன், கார்த்திக், விக்னேஷ், தினேஷ் ஆகிய 5 பேர் சரண் அடைந்துள்ளனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் சுகுமார், மணி பாரதி ஆகியோரைக் கைது செய்துள்ளோம்.
அவர்களிடம் விசாரித்தபோது, சில பிரச்சினைகளுக்காக மகேஷ்குமாரை கொலை செய்ததாகத் தெரிவித்தனர்.
இருந்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.