பெண்கள் குழந்தைகளின்  கௌரவத்தை காப்பாற்றக்கூடிய ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்புவது குறித்து கவனம் செலுத்தவேண்டும்  என பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவின் மகளிர் பிரிவின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் போது பெண்களினதும் குழந்தைகளினதும் நலன்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களிற்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளன அவர்கள் பேருந்துகள் புகையிரதங்களில் கூட பாதுகாப்பாக   பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையை தாமதமின்றி  மாற்றவேண்டும் பெண்களின் கௌரவத்தை பாதுகாக்ககூடிய ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கவேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த வழக்குகளை துரிதப்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்கவேண்டும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெண்களே எனவும் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த பல வருடங்களாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் நாடு தற்போது போதைப்பொருள் கடத்தல் கேந்திர நிலையமாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு போதைப்பொருள் ஆபத்தின தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படு;த்துவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.