நேர்காணல் : ரொபட் அன்டனி
கேள்வி : மக்கள் விடுதலை முன்னணிக்குள் தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாக செய்திகள் வருகின்றனவே?
பதில் : அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எமது கட்சி மிகவும் ஒற்றுமையாக செயற்பட்டுவருகின்றது. கடந்த காலத்தில் சர்வாதிகார ஆட்சியை அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியே வீட்டுக்கு அனுப்பியது. எனவே அதனை சகித்துக்கொள்ள முடியாத தோல்வியுற்றவர்கள் தற்போது எமது கட்சியை விமர்சித்துவருகின்றனர். வீண் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
கேள்வி : தோல்வியடைந்த சக்திகள் இவ்வாறு செய்வதாக நீங்கள் கூறினாலும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவே?
பதில் : அந்த ஊடகம் பற்றியும் எமக்கெதிரான குற்றச்சாட்டுகளையும் சேறு பூசும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்ற ஊடகவியலாளர்கள் பற்றியும் எமக்கு நன்றாகவே தெரியும்.
கேள்வி : ஜே.வி.பி. அரசாங்கத்தை பாதுகாப்பதாக கூறப்படுகிறதே?
பதில் : அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. நாங்கள் எந்தவொரு கட்சியையும் பாதுகாக்க மாட்டோம். மக்களுக்கு சேவையாற்றுவதே எமது நோக்கமாகும். அதனையே செய்து வருகிறோம்.
கேள்வி : ஜே.வி.பி. தலைவருக்கு அலரிமாளிகையில் ஒரு அறை இருப்பதாகவும் இரகசிய டீல் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறதே?
பதில் : இவ்வாறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அதாவது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமலேயே இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆனால் நாங்கள் யாரென்று மக்களுக்கு தெரியும். மக்கள் எம்முடன் இருக்கின்றனர். நாங்கள் மிகவும் ஒற்றுமையாக எமது பயணத்தை முன்னெடுக்கிறோம்.
கேள்வி : ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி உங்களுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று கூறுகிறீர்களா?
பதில் : ஆம், நிச்சயமாக அவ்வாறு கூறுகிறோம். தோல்வியடைந்த ஒரு அரசியல் அணியே எமக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது பயணத்தை யாரும் தடுக்க முடியாது.
கேள்வி : கடந்த காலங்களிலும் இவ்வாறு கட்சிக்குள் சிக்கல்கள் ஏற்பட்டபோது ஒன்றும் இல்லை என்று கூறினீர்கள்?
பதில் : அந்த நிலைமை வேறு. தற்போது மேற்கொள்ளப்படும் சேறுபூசும் செயற்பாடுகள் வேறானதாகும். இதற்கு முன்னர் எமது கட்சியிலிருந்த பலர் முரண்பட்டு வெளியேறியுள்ளனர். சிலர் வெளியேற்றப்பட்டுமுள்ளனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை வித்தியாசமானதாகும்.
கேள்வி : உங்கள் மனச்சாட்சிக்கு அமைவாக உங்கள் கட்சிக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறுகிறீர்களா?
பதில் : மனச்சாட்சிக்கு அமைவாகவே எமது கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பில் எவ்விதமான பிரச்சினையும் இல்லையென்று கூறுகின்றேன்.
கேள்வி : இருந்தாலும் முன்னைய ஆட்சியின் போது நீங்கள் செயற்பட்ட விதத்திலும் தற்போதைய ஆட்சியில் ஜே.வி.பி. செயற்படும் விதத்திலும் மாற்றத்தை நாங்கள் காண்கிறோம்?
பதில் : அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையே அதற்கு காரணமாகும். அப்போதைய அரசியல் சூழலிலும் தற்போதைய நிலையிலும் பாரிய மாற்றம் உள்ளதாக அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
கேள்வி : முன்னர் மக்களின் வாழ்க்கை சுமை அதிகரித்தால் மக்கள் விடுதலை முன்னணி முதலாவதாக வீதியில் இறங்கும். இம்முறை வற்வரி அதிகரிக்கப்பட்டும் கட்சி இன்னும் வீதியில் இறங்கவில்லையே?
பதில் : இந்த விடயத்தை முதன் முதலில் நாட்டுக்கு கூறியதே நாங்கள் தான். எதிர்வரும் 26 ஆம் திகதி இந்த வற்வரி அதிகரிப்புக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் நடத்துவோம்.
கேள்வி : கடந்த காலங்களில் நீங்கள் செயற்பட்ட விதத்தை பார்க்கும்போது பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லையே?
பதில் : நிச்சயமாக நாங்கள் எதிர்பார்த்த வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாட்டு மக்கள் எதிர்பார்த்த முடிவுகளும் கிடைக்கவில்லை. காரணம் கடந்த தேர்தலில் இறுதித் தருணத்தில் மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிக்க வேண்டுமென மக்கள் கருதியதால் அதிகமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து விட்டனர். இதனால் எமக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை.
கேள்வி : அது தொடர்பில் கவலையடைகின்றீர்களா?
பதில் : அந்த நிலைமை குறித்து மக்கள் இன்று கவலையடைகின்றார்கள். சிலர் அழுகின்றனர். இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் எங்கள் முடிவு மாறியிருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.
கேள்வி : கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. எடுத்திருந்த முடிவு எவ்வாறானது? அதாவது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்காமல் எதிர்ப்பும் தெரிவிக்காமல் குழப்பிவிட்டீர்களே?
பதில் : இல்லை நாங்கள் அன்று எடுத்த முடிவு சரியானது என்பது இப்போது நிரூபணமானது. மஹிந்தைவை தோற்கடிப்போம். ஜனநாயகத்தை கட்டியெழுப்புவோம் என்றுதான் நாங்கள் கூறினோம்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனநாயகம் பலப்படும் என்று நாம் கூறவில்லை. அதாவது மஹிந்தவின் கடையில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று கூறிய நாங்கள் மைத்திரிபால சிறிசேனவின் கடையில் உள்ள பொருட்கள் நிச்சயம் இல்லாதவை என்று நாங்கள் கூறினோம். அது இன்று சரியாகியுள்ளது.இது தான் எமது விளக்கம்.
ேகள்வி : நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு தேவையா?
பதில் : தற்போதைய அரசியலமைப்பானது 38 வருடங்கள் பழமையாகிவிட்டது. உலகம் மாறிவிட்டது. எனவே தற்போதைய நிலைமையில் புதிய அரசியலமைப்பு ஒன்று தேவையாகும். தேசிய ஒற்றுமை மத சகவாழ்வு பலப்படும் வகையில் புதிய ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு வரவேண்டும்.
கேள்வி : இந்த இடத்தில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன ?
பதில் : ஜனநாயகம் பலமடைய வேண்டும், பொருளாதாரத்தில் சமமான பங்கீடு இருக்க வேண்டும், இன, மொழி பாகுபாடு இருக்கக் கூடாது. பொருளாதார சமத்துவத்திலேயே தேசிய பிரச்சினைக்கான தீர்வு காணப்படுகிறது. இதனை தவிர்த்து எவ்வாறான வெளிநாட்டு தீர்வுகளை இங்கு கொண்டு வந்தாலும் பொருத்தமாகாது. மாறாக தமிழ் மக்கள் தமிழ் மக்கள் என்பதால் இன்று பல அநீதிகளை எதிர்கொள்கின்றனர். அந்த நிலைமை மாற வேண்டும்.
எமது அரசியலமைப்பில் இலங்கையின் அரச மொழிகளாக சிங்களம், ஆங்கிலம் காணப்படுமென்றும் தமிழ் மொழியும் அரச மொழியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழியும் அரச மொழி என்று ஏன் குறிப்பிட வேண்டும். அதாவது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் இலங்கையின் அரச மொழிகளாகும் என குறிப்பிட வேண்டும். இவ்வாறு பல மாற்றங்களை செய்ய வேண்டும். மாகாண சபை முறைமையும் தீர்வாக அமையாது.
அத்துடன் சிலர் கூச்சலிடுகின்ற சமஷ்டி முறைமையும் ஒருபோதும் தீர்வாக அமையாது. நாட்டை பல துண்டுகளாக பிரித்து நிர்வகிக்க முடியாது. அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வு வேண்டும். அந்த வகையில் எமது கட்சியின் தீர்வு திட்டமாக பூகோளம் மற்றும் குடி பரம்பலை அடிப்படையாகக் கொண்டு கிராம சபைகளை அமைக்க வேண்டுமென நாம் கூறியிருக்கின்றோம். இந்த கிராம சபைகள் அமைப்பதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு விடை காணலாம்.
கேள்வி : இந்த கிராமிய சபைகள் எவ்வாறு இயங்கும்?
பதில் : பூகோளம் மற்றும் குடி பரம்பலை அடிப்படையாகக் கொண்டு கிராம சபைகளை அமைத்து அதனூடாக ஒரு பிரதிநிதி பாராளுமன்றம் செல்வதற்கு வழிவகுக்க வேண்டும். இது முழு இலங்கைக்கும் பொருத்தமாகும். இது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த கிராம சபைகள் அமைக்கப்பட வேண்டும்.
கேள்வி : மாகாண சபைகளுடாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதா?
பதில் : அது முடியாதது என்பது நிரூபணமாகியுள்ளது. மூன்று தசாப்தங்களாக மாகாண சபை முறைமை நாட்டில் நடைமுறையில் உள்ளது. ஆனால் அதனூடாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மாகாண சபைகளினூடாக மேலும் சில அமைச்சர்கள் உருவாகுவது மட்டுமே இடம்பெற்று வருகிறது. மத்திய மாகாண சபையின் தமிழ் கல்வி அமைச்சர் இருந்தார். கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் மாணவர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? எனவே மாகாண சபையானது தேசிய பிரச்சினைக்கு தீர்வல்ல.
கேள்வி : வடமாகாண சபையின் இயங்கு நிலை தொடர்பில்?
பதில் : வடமாகாண சபையின் நிலைமையை எடுத்துப் பாருங்கள். மத்திய அரசாங்கம் அனுப்பிய நிதியைக் கூட செலவு செய்யாமல் உள்ளனர். மாகாண சபை முறைமை தேசிய பிரச்சினைக்கு தீர்வு அல்ல என்பதை வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நிரூபித்திருக்கிறார். வடக்கில் இன்று மீனவர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இது தொடர்பில் வடக்கு முதல்வர் மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருப்பாரா? மாறாக தமது பலத்தை தக்கவைக்க மாகாண சபையை பயன்படுத்தும் நிலைமையே காணப்படுகிறது.
கேள்வி : ஒருவேளை மாகாண சபைக்கு அதிகாரம் போதுமற்றதாக இருக்கலாம் அல்லவா? அதிகாரம் இல்லாததால் முதலமைச்சர் இவ்வாறு செயற்படலாம் அல்லவா?
பதில் : இல்லை இல்லை அதிகாரங்கள் போதுமான அளவு உள்ளன. எந்தக் குறையும் இல்லை. உடனடியாக பொலிஸ் அதிகாரம் இல்லையென கூறுவார்கள். ஆனால் பொலிஸ் அதிகாரத்தை குறைத்தால் பயங்கரவாத நிலைமை தோன்றிவிடும். இவை எதிலும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாது.
கேள்வி : அப்படியாயின் நீங்கள் கூறும் கிராமிய சபைகளின் ஊடாக மீனவர் பிரச்சினையை தீர்க்க முடியுமா?
பதில் : தேசிய பிரச்சினைக்கு தீர்வை நோக்கமாகக் கொண்டே கிராமிய சபைகளை நாம் முன்வைக்கின்றோம். மீனவர் பிரச்சினை என்பது அதுவும் தேசிய பிரச்சினையாகும்.
கேள்வி : அப்படியானால் அதை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை அல்லவா?
பதில் : நிச்சயமாக அது மத்திய அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் மத்திய அரசாங்கத்திற்கு மாகாண சபை அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதனை செய்யவில்லை. ஆனால் அந்த பொறுப்பை கூட மாகாண சபை செய்யவில்லை என்பதே எமது குற்றச்சாட்டாகும்.
கேள்வி : தேசிய அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிடைக்கும் என நம்புகிறீர்களா?
பதில் : இந்த அரசாங்கத்தினூடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென நாம் நம்பவில்லை. இது தான் செயற்பாட்டு ரீதியாக எமக்கு தெரிந்த உண்மை.
கேள்வி : காணாமல் போனோர் பிரச்சினை, காணிகளை மீள் வழங்காமை, இராணுவப் பிரசன்னம் என பல பிரச்சினைகள் இன்னும் காணப்படுகின்றன. அவற்றை தீர்க்க என்ன யோசனை முன்வைத்தீர்கள்?
பதில் : நீங்கள் கூறுகின்ற இந்த அனைத்து பிரச்சினைக்கும் தீர்வை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு நாங்கள் பரிந்துரைகளை முன்வைத்தோம். வடக்கு, கிழக்கில் சாதாரண மக்கள் சமஷ்டியை கோரவில்லை. மாறாக அந்த மக்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வையே கோருகின்றனர். சுதந்திரமாக வாழ்வதற்கும் பேசுவதற்குமான சூழலை சாதாரண மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதைய அரசாங்கம் அதனை இன்னும் செய்யவில்லை. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நியமிப்பதாக கூறினார்கள். இன்னும் செய்யவில்லை. காணாமல்போனோர் தொடர்பில் அலுவலகம் அமைக்கப்படும் என்று கூறினார்கள். இன்னும் அமைக்கப்படவில்லை. மக்களை ஏமாற்றுவதையே செய்து கொண்டிருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM