(எம்.ஆர்.எம்.வஸீம்)

எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை என்பது வெறும் பேச்சளவிலே இருக்கும். செயற்பாட்டில் அவை இடம்பெறுவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் சுசில் பிரேம்ஜயன்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவத்தை பெற்றிருக்கும் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் திலான் பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்திருப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து ஒரே வேட்பாளரை பிரேரிக்கவேண்டும் என்றதொரு பிரேரணை வந்திருக்கின்றது. அந்த பிரேரணை பெரும்பாலும் நிறைவேற்றப்படும். அவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எவ்வாறான பதவியை வழங்குவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் பேச்சுவாரத்தை இடம்பெற்றிருக்கின்றது. அதுதொடர்பான தீர்மானங்கள் இன்னும் சில தினங்களில் வெளிவரும். 

அதேபோன்று கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற இருக்கின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கு எதிர்காலத்தில் எவ்வாறான பதவிகள் வழங்குவது தொடர்பில் அவர்கள் மத்தியில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.