மாத்தளை - லக்கல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதும் அச்சம்பவம் தொடர்பாக இன்றுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது. 

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் சிங்கள புத்தாண்டு தினமான 13ஆம் திகதி நள்ளிரவு லக்கல பொலிஸ் நிலைய களஞ்சிய அறை திறக்கப்பட்டு ஐந்து கைத்துப்பாக்கிகளும் ஒரு டி-56 ரக துப்பாக்கியும் கொள்ளையிடப்பட்டிருந்தன. 

பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அப்பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றிற்கருகில் துப்பாக்கிகள் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்டனர். 

இதேவேளை சம்பவத்தின் போது கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர் பொலிஸாருக்கும் நீதிமன்றத்திற்கும் வழங்கிய வாக்கு மூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.