அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் போட்டியில் திரில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியினர் உலக மல்யுத்த சம்பியன் பட்டத்தையும் (WWE Championship title) பரிசாக பெற்று வெற்றியை கொண்டாடியுள்ளனர். 

2019 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. ஒருநாள்  உலகக் கிண்ணத் தொடரை கைப்பற்றியதுடன் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவுடன் மோதி வருகிறது.

இதில் முதல் போட்டியை அவுஸ்திரேலிய அணி வெற்றிகொண்டுள்ள நிலையில் இரண்டாவது போட்டி சமநிலையில் முடிந்தது. இந் நிலையில் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம் திகதி நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென்ஸ்டோக்கின் அதிரடியாட்டத்தினால் இங்கிலாந்து திரில் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமப்படுத்தியது.

இந் நிலையில் இந்த வெற்றிக்கும் 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியமைக்காகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்த உலக மல்யுத்த சம்பியன் திரிபல் எச், இந்த டபிள்யூ.டபிள்யூ. ஈ. சம்பியன் பட்டம் உங்களுடையது எனவும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் குறித்த சம்பியன் பட்டத்தை இங்கிலாந்து அணி பரிசாக பெற்றதை தொடர்ந்து ஜோப்ர ஆர்ச்சர், ஜேசன் ரோய், ஜோஸ் பட்லர், ஜோனி பெயர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அந்த பட்டத்துடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டடியுள்ளனர்.