நாவலப்பட்டியில் இடம்பெற்ற இருவேறு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நாவலப்பிட்டி பொலிஸார் இரு பாடசாலைகளையும்  சேர்ந்த 9 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

இம்மோதல் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்தில் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையில் விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

இப்போட்டிகளில் கம்பளை பகுதி பாடசாலை மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாவலப்பிட்டி பகுதி பாடசாலை மாணவர்கள் சிலருக்கும் கம்பளை பாடசாலை மாணவர்கள் சிலருக்குமிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இதனால் பஸ்வண்டி ஒன்று சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் 9 மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவர்களில்  ஆறு மாணவர்கள் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர்களாவர். ஏனைய மூன்று மாணவர்களும் கம்பளை பகுதி பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.