(எம்.மனோசித்ரா)

கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து செயலாளருக்கோ , தவிசாளருக்கோ தனித்து தீர்மானிக்க முடியாது. கட்சியின் செயற்குழுவே அது குறித்து தீர்மானிக்கும் என்று தெரிவித்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.தே.க நவீன ஜனநாயக கட்சி என்பதால் தான் வேட்பாளராக பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். 

நிதி அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், 

தற்போது நாட்டில் முழுமையான சுதந்திரமும் ஜனநாயகமும் காணப்படுகிறது. அதனால் தான் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஊடகங்களைப் புறக்கணிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் என்று பெயர் குறிப்பிடப்படுபவர்கள் கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரமும் இருக்கிறது. 

நாம் யாரையும் ஊடகங்களில் கருத்து வெளியிட வேண்டாம் என்று கட்டுப்படுத்தியதில்லை. எனவே தான் ஐக்கிய தேசிய கட்சியை நவீன ஜனநாயக கட்சி என்று கூறுகின்றோம். இன்று நாம் நவீன ஜனநாயக நாடொன்றை கட்டியெழுப்பியுள்ளோம். இதனை தவறாகப் நோக்குபவர்களை எண்ணி கவலையடைகின்றோம். 

கேள்வி : ஜனநாயக கட்சி என்று கூறப்பட்டாலும் இன்று உங்கள் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே?

பதில் : ஜனநாயக கட்சி என்றால் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் தவிர்க்க முடியாததொன்றாகும். ஆனால் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடிதமொன்று மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் அனுப்பியதை ஒழுக்காற்று நடவடிக்கை என்று கூற முடியாது. 

கட்சியின் செயலாளரோ அல்லது தவிசாளரோ ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து தனித்து தீர்மானிக்க முடியாது. கட்சியின் செயற்குழுவே அதனைத் தீர்மானிக்கும். இது வரையில் செயற்குழு அவ்வாறாதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை என்றார்.