முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் புற கிராமங்களான, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் அபகரிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமான(எக்டோ) நிறுவனத்தின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது, முல்லைத்தீவு பி.டபிள்யூ.டி சந்தியில் இருந்து ஊர்வலமாக ஆரம்பமானது.

தொடர்ந்து ஊர்வலமாக மாவட்ட செயலகத்தினை அடைந்ததும், அங்கு ஆர்ப்பாட்டக் காரர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவிற்கான மகஜரினை, அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான கி.சிவலிங்கம், சி.லோகேஸ்வரன், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம்(எக்டோ) அமைப்பின் பிரதிநிதிகள், கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மக்களுடன் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.