கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் வாடகைக்கு வாகனங்களை பெற்றுத் தருவதாகக் கூறி  சட்டவிரோதமான முறையில் வாடகைக்கு வாகனங்களை வழங்கி வந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த நடவடிக்கையில்  திட்டமிட்ட குழுவினர்  தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குவரும் பயணிகளிடம் குறைந்த கட்டணத்திற்கு வாடகைக்கு வாகனங்களை பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த குழுவினர் செயற்பட்டு வந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் நீர்கொழும்பு, கட்டானை, சீதுவை, ஜா-எல,  மினுவாங்கொட  போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கட்டுநாயக்க பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 சட்டவிரோதமான முறையில் விமான நிலையத்தில் செயற்படும் வாடகை வாகன சாரதிகள்  விமான நிலையத்தில் தமது ஆட்களைப் பயன்படுத்தி பயணிகள் வாகனங்களில் பயணிப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும்,  இந்த குழுவினர் குறைந்த வாடகைக்கு வாகன சேவையை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து பின்னர் இடைநடுவில் அதிக பணத்தை கேட்பதாகவும்,  பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 இதேவேளை, கட்டுநாயக்க   விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் வாடகைக்கு வாகனங்களை பெற்றுத் தருவதாக கூறி  சட்டவிரோதமான முறையில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மூவரை விமான நிலைய பொலிஸார் கடந்த வாரம் கைது செய்தனர்.  

சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நடவடிக்கையில்  ஈடுபடும் குழுவின் அங்கத்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட  நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.