( மயூரன் )

பாதுகாப்பு அமைச்சர் கூறியதையே நான் கூறினேன். அதனை விட வேறு எதுவும் எனக்கு தெரியாது. அன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வேறு  என்ன சொன்னேன் என்றும் எனக்குத் தெரியாது என முன்னாள் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமை தினத்தன்று யாழ்ப்பாணத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டனர். 

இவர்கள் கடத்தப்பட்ட பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அப்போதைய ஊடகத்துறை அமைச்சரான ஹெகலிய ரம்புக்வெல அவர்கள் இருவரும் கைது செய்யபப்பட்டு உள்ளதாகவும் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்தார். 

ஆனால் இன்று வரை அவர்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் அவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

அந்த வழக்கு நேற்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதிஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது மன்றில் முன்னாள் ஊடக அமைச்சர் முன்னிலையாகி சாட்சியம் அளித்தார்.

இதன்போதே பாதுகாப்பு அமைச்சர் கூறியதையே நான் கூறினேன். அதனை விட வேறு எதுவும் எனக்கு தெரியாது. அன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வேறு  என்ன சொன்னேன் என்றும் எனக்குத் தெரியாது என முன்னாள் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.