காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை காவல்துறையினரின் முன்னிலையிலேயே உடைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை உடைப்பின் போது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை உடைப்பை கண்டித்து செப்டம்பர் மூன்றாம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். ப சிதம்பரம் கைது அணுகுமுறை, திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்.

காங்கிரஸ் கட்சியின் தலைமையை அச்சுறுத்தும் அரசாக பாஜக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம். அதானி, அம்பானியின் முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் நடவடிக்கைதான் காஷ்மீர் விவகாரம், ஜிஎஸ்டி வரியால் தொழில் துறை பாதிக்கப்பட்டு, வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.

இதனை தகுந்த ஆதாரத்துடன் வெளியிட்டதால் தான் ப சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவில் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் விலைவாசி உயரும். காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளது. இது ஜனநாயக படுகொலை. காஷ்மீரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. சுமுக நிலை திரும்ப மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.