பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பிற்கமைவாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக போதனைசாரா உழியர்களின் 48 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு இன்று(28) பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமானது.

பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொண்ட பெருந்தொகையான பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வுப் பேரணியொன்றில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக நுழைவாயிலிருந்து ஆரம்பமான பேரணி அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதி வரை சென்றடைந்து பல்கலைக்கழக வளாகத்தினை சென்றடைந்தது.

பேரணியினைத் தொடந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் தமது கோரிக்கைகளை மிக விரைவில் நிவர்த்தி செய்ய உரிய தரப்பினர் முன்வர வேண்டும் எனவும், அவ்வாறு தமது பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுமிடத்து தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறும் எனவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பல்கலைக்கழக நுழைவாயிலை அண்டிய பகுதியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர்.

சம்பள முரண்பாடுகளை நீக்குதல், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பில் அண்மையில் தமது தொழிற்சங்கம் மேற்கொண்ட பணிப் பகிஷ்கரிப்பிற்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாலேயே இரண்டு நாட்கள் கொண்ட பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெறுவதாகவும், இதன் பின்னரும் தமது கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படாது போனால் நாடு தழுவிய ரீதியில் உள்ள சுமார் பதினாறாயிரம் பல்கலைக்கழக ஊழியர்களின் ஒட்டு மொத்த ஆதரவுடன் தொடர் போராட்டங்கள் இடம்பெறுமென இவ்வூரியர்கள் தெரிவித்தனர்.