சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இரண்டு இடங்கள் முன்னேறி 733 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளார்.

திமுத் கருணாரத்ன நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸுக்களிலும் மொத்தமாக 161 (39+122) ஓட்டங்களை குவித்ததுடன் போட்டியின் ஆட்ட நாயனாகவும் தேர்வானார்.

இரண்டாவது போட்டியின் இரண்டு இன்னிங்ஸிகளிலும் மொத்தமாக 86 (65+21) ஓட்டங்களையும் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை துடுப்பாட்ட வீரர்கள் தரவரிரசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களிலும் மாற்றமில்லை. அதன்படி இந்திய  அணித் தலைவர் விராட் கோலி 910 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 878 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியாவின் புஜாரா 856 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூஸிலாந்தின் ஹென்றி நிக்கோலஷ் 749 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சு தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென்னாபிரிக்காவின் கெஹிசோ ரபடா 851 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் 814 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் 793 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூஸிலாந்தின் நில் வக்னர் 785 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். 

சகல துறை ஆட்டக்காரர்கள் தரவரிசைப் பட்டியலில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹொல்டர் 433 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக் 411 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷின் சஹிப் அல்ஹசன் 399 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியாவின் ஜடேஜா 395 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் வேமோன் பிளாண்டர் 326 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.