கண்மூடித்தனமான துடுப்பாட்டமே நியுசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  இலங்கை அணி தோல்வியடைவதற்கு காரணம் என அணித்தலைவர் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

முதல் இனிங்சில் இது துடுப்பாடுவதற்கு சிறந்த ஆடுகளமாக காணப்பட்டது,ஆனால் நாங்கள் சிறந்த முறையில் எங்கள் சொட்களை விளையாடவில்லை என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

துடுப்பாட்டத்திற்கு சிறந்த விக்கெட்டாக அது காணப்படுகின்றது என நினைத்த துடுப்பாட்ட வீரர்கள் நின்று நிதானித்து விளையாட முயலவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அறுபது ஓட்டங்களை பெற்ற பின்னர் நான் கூட கண்மூடித்தனமான சொட்டை விளையாடினேன் என குறிப்பிட்டுள்ள திமுத் கருணாரட்ண நியுசிலாந்து அணியினர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள் அவர்கள் பெரும் எண்ணிக்கையை பெற்று எங்களிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அணி வீரர்கள் சுதந்திரமாக துடுப்பெடுத்தாட அனுமதிக்கவேண்டும் என நான் தெரிவிப்பதன் அர்த்தம் அவர்கள் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆட முயலவேண்டும் என்பதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரம் என்பது ஒவ்வொரு பந்திற்கும் மட்டையை சுழற்றுவதல்ல சுதந்திரமாக விளையாடுவது என்பது தன்னம்பிக்கையுடன் விளையாடுவது எனவும் தெரிவித்துள்ள திமுத்கருணாரட்ண சிலவேளைகளில் எங்கள் துடுப்பாட்ட வீரர்களிடம் பொறுமையில்லை என நான் கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டியென்பது பெறுமதியான விடயம் சூழ்நிலைக்கு தகுந்த விதத்தில் எப்படி விளையாடுவது என்பது துடுப்பாட்ட வீரர்களிற்கு தெரிந்திருக்கவேண்டும் எனவும் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.