ஆசஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென்ஸ்டோக்ஸ் ஆடிய அற்புதமான இனிங்ஸை கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த இனிங்ஸ் என பாராட்டி வருகின்றனர்

தமது டுவிட்டர் செய்தியில் அவர்கள் இதனை பதிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் உலகில் நான் தலைசிறந்த பல இனிங்ஸ்களை கடந்த  வருடங்களில் பார்த்திருக்கின்றேன் என தெரிவித்துள்ள இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் ஜெவ்ரி பொய்கொட் எனினும் கடந்த ஐம்பது வருடங்களில் நான் பார்த்த தலைசிறந்த இனிங்ஸ் இதுவென பென்ஸ்டோக்சின் இனிங்ஸை  குறிப்பிட்டுள்ளார்.

பென்ஸ்டோக்ஸ் ஆசஸ் தொடரை காப்பாற்றினார்,எனவும் குறிப்பிட்டுள்ள பொய்கொட் உலககிண்ண இறுதிப்போட்டியில் அவரது இனிங்சை விட இது சிறந்த இனிங்ஸ் என குறிப்பிட்டுள்ளார்.

ஆசஸில் நம்பமுடியாத காட்சிகள் என தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள யுவராஜ் சிங் நீங்கள்  பயன்படுத்தி என்ன செய்தீர்கள் என்பதை என்னால் விபரிக்க முடியவில்லை ஸ்டோக்ஸ் என குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த துடுப்பாட்டம் என மைக்கல்வோகன் இதனை வர்ணித்துள்ளார்.

எனக்கு சகோதரியில்லை  என தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரஹாம் சுவான் எனக்கு சகோதரியிருந்தால் அவர் பென்ஸ்டோக்ஸினை மணமுடிக்கவேண்டும் என விரும்புவேன் என தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் என்ன செய்தார் என்பதை அவராலேயே நம்பமுடியுமா என்பது தெரியவில்லை என பென்ஸ்டோக்சின் சக வீரர் ஸ்டுவார்ட் புரோட் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பார்த்த மிகச்சிறந்த இனிங்ஸ் இதுவென தெரிவித்துள்ள இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கிருஸ்ணமாச்சாரி சிறீகாந் இறுதிப்பந்து வரை நீடிக்கும் டெஸ்ட் போட்டிக்கு நிகர் எதுவுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டியொன்றில் நீங்கள் பார்க்ககூடிய தலைசிறந்த அணி என பென்ஸ்டோக்சின் துடுப்பாட்டத்தை வர்ணித்துள்ள இந்திய கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்சா போக்லே டெஸ்ட் கிரிக்கெட்டை போன்ற விளையாட்டு உலகில் வேறு எதுவும் கிடையாது அது நீண்ட காலம் வாழட்டும் என குறிப்பிட்டுள்ளார்.