(செ.தேன்மொழி)

ஹங்வெல்ல பகுதியில் மோட்டார் சைக்களில் முகமூடி அணிந்து வந்த  நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹத்கம பகுதி வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் இருவரால் இந்த  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இதன் போது அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   

வர்த்தகரின் சாரதியான பாதுக்க - கலகெதர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உயிரிழந்த வர்த்தகரும் அவரது குடும்பத்தினரும் வாடகை வீடொன்றிலே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான வீடொன்றின் கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த வர்த்தகரும் அவரது சாரதியும் வீட்டு நிர்மான பணிகளை பார்வையிட சென்றுள்ளனர்.

இதன் போது இரவு 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் முகமூடியணிந்த நபர்கள் இருவர் வர்த்தகரின் வீட்டுக்குச் சென்று துப்பாக்கி முனையில் குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளனர்.

 பின்னர் வர்த்தகரின் மனைவியை அச்சுறுத்தி வர்த்தகரை வீட்டுக்கு வரவழைக்குமாறு கூறியுள்ளனர்.

இந்நிலையில் வர்த்தகர் தனது சாரதியுடன் மோட்டார் சைக்கில் ஒன்றில் அவசரமாக வீடு திரும்பியுள்ளனர். இதன் போதே குறித்த வர்த்தகர் மீதும் அவரது சாரதி மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர் முகமூடியணிந்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தின் போது படுகாயமடைந்திருந்த இருவரும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஹங்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது சம்பவ இடத்திலிருந்து டீ - 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் பல மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காணொளி காட்சிகளினூடாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இதுவரையில் சந்தேக நபர்களை அடையாளம் காணவில்லையென ஹங்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஹங்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியில் தலைமையின் கீழும் , மிரிஹான குற்றப் புலனாய்வு பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.