இந்தியாவின், பீகார் மாநிலத்தில் 35 வயது தாய் தன்னுடைய மூன்று குழந்தைகளுடனும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் பாட்னா-கயா பகுதிகளுக்கு இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் நேற்று பகல், மூன்று வயது குழந்தையொன்று மழையில் நனைந்தபடியே அழுதுகொண்டிருந்துள்ளது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், குழந்தையின் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் அவருடைய இரண்டு ஆண் குழந்தைகளின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் காயங்களுடன் உயிர்தப்பிய குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், குழந்தைகள் உடுத்தியிருந்த ஆடைகள் கந்தலாக காணப்பட்டது. இதனால் வறுமை அல்லது வீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பால் குழந்தைகளுடன் சேர்ந்து, தாயும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும், இறந்தவர்களை பற்றிய அடையாளம் இதுவரை கண்டறிப்படவில்லை. அதனை கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

மேலும், குறித்த தற்கொலைகளுக்கான காரணம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.