(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பொதுஜன பெரமுனவின் போஷகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நாளை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெறும் முதலாவது இருதரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும். 

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் பங்குபற்றும் உறுப்பினர்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். 

இதே போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் போஷகர் பசில் ராஜபக்ஷ, தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.