ஜி–7 நாடு­களின் உச்­சி­மா­நாடு இரண்­டாவது நாளாக நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிரான்ஸில்  இடம்­பெற்­றது. இதன்போது எவ்வித முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஈரான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டார்.

நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை  பிரான்ஸின் கடற்­கரை நக­ரான பியர்­றிட்ஸில்  ஆரம்­ப­மான இந்த உச்­சி­மா­நாட்டில்  அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்­தா­னிய  பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன்,  பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக் ரோன், கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ரூடோ,  இத்­தா­லிய பிர­தமர் கியு­ஸெப்பே கொன்ட், ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­ஜெலா மெர்கல்,   ஜப்­பா­னிய பிர­தமர் ஷின்ஸோ அபே மற்றும் ஐரோப்­பிய சபைத் தலை­வர் டொனால்ட் ரஸ்க் உள்­ள­டங்­க­லான  உலகத் தலை­வ­ர்கள் கலந்துகொண்­டனர்.

இந்த உச்­சி­மா­நாட்டின் போது பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து எது­வித உடன்­ப­டிக்­கையும் எட்­டாத நிலையில் விலக நேரிடும் என ஐரோப்­பிய சபைத் தலைவர் பிரித்­தா­னிய பிர­த­ம­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்தார்.

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வது தொடர்­பான பிறிக்ஸிட் உடன்­ப­டிக்கை தொடர்பில்  பிரித்­தா­னியப்  பிர­த­மரால் யதார்த்­த­மான யோச­னைகள் முன்­வைக்­கப்­படும் பட்­சத்தில் அவற்றைச் செவி­ம­டுக்க ஐரோப்­பிய ஒன்­றியம் தயா­ராக உள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.

அதே­ச­மயம் அவர் அங்கு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கையில்,  உடன்­ப­டிக்­கை­யின்றி பிரித்­தா­னியா வில­கு­வ­தற்கு தான் ஒத்­து­ழைப்பு அளிக்­கப்­போ­வ­தில்லை எனக் கூறினார்.

இந்த உச்­சி­மா­நாட்டின் போது பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன் ஸன் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யுடன் சந்­திப்பை  மேற்­கொண்டார். மேற்­படி சந்­திப்­பை­ய­டுத்து டொனால்ட் ட்ரம்ப்  கருத்து வெளியி­டு­கையில்  போரிஸ் ஜோன்ஸன் சரி­யான விதத்தில் செயற்­ப­டு­வ­தா­கவும்  அவர் அற்­பு­த­­மான பிர­தமர் ஒரு­வ­ராக விளங்­கு வார் எனவும் குறிப்­பிட்டார்.

பிறிக்ஸிட்  உடன்­ப­டிக்கை குறித்து போரிஸ் ஜோன்­ஸ­னுக்கு என்ன ஆலோ­சனை கூற விரும்­பு­கி­றீர்கள் என டொனால்ட் ட்ரம்­பிடம் வின­வப்­பட்டபோது, அவ­ருக்கு ஆலோ­சனை தேவை­யில்லை எனவும்  அவர் தனது பணிக்கு சரி­யான ஒரு­வ­ராக  திகழ்­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். 

முதல் நாள் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற உச்­சி­மா­நாட்டின்போது   அமெ­ரிக்கா–சீனா­வு­ட­னான வர்த்­தகப் போர் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கு  எதி­ராக சுங்க வரி அச்­சு­றுத்­தல்­களை விடுத்து வரு­கின்­றமை என்­பன தொடர்பில்  ஐரோப்­பிய ஒன்­றியத் தலை­வர்கள் ட்ரம்­புக்கு எதி­ராக கடும் விமர்­ச­னத்தை வெளியிட்­டனர்.

இந்­நி­லையில் மேற்­படி உச்­சி­மா­நாடு குறித்து டொனால்ட் ட்ரம்ப் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விப­ரிக்­கையில்,  "நான்  பிரான்­ஸிற்கு வரு­வ­தற்கு முன்னர் ஜி–7 உச்­சி­மா­நாட்டில் கலந்துகொள்ளும் ஏனைய நாடு­க­ளுடன் அமெ­ரிக்­காவின் உற­வுகள் பதற்­ற­நி­லை­யொன்றில் உள்­ள­தா­கவும்  இந்த இரு நாள் கூட்டம் பாரிய அனர்த்­தத்­திற்­கு­ரிய ஒன்­றாக இருக்கும் எனவும் போலி செய்­திகள் தெரி­வித்­தன. ஆனால் நாம் இங்கு மிகவும் சிறப்­பான கூட்­ட­மொன்றை நடத்­தி­யுள்ளோம்"  என ட்ரம்ப் தெரி­வித்தார்.

முத­லா­ளித்­து­வத்­திற்கு எதி­ரான செயற்­பாட்­டா­ளர்கள் இந்த உச்­சி­மா­நாட்­டிற்கு எதிர்ப்புத் தெரி­வித்து  நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை  ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.  அவர்­களைக் கலைக்க பொலிஸார் கண்­ணீர்ப்­புகை  மற்றும் தண்­ணீர்ப் பிர­யோ­கங்­களை மேற்­கொண்­டனர்.

அதே­ச­மயம் இந்த உச்­சி­மா­நாட்­டிற்கு எதிர்ப்புத் தெரி­வித்து பிரான்ஸ் எல்­லை­யி­லுள்ள ஸ்பெயின் பிராந்­தி­யத்­திலும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன.

இதன்­போது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் ஜி–7 நாடு­களின் தலை­வர்கள்  கால­நிலை மாற்றம், திரு­நங்­கை­களின் உரி­மைகள் மற்றும் நீதி­யான பொரு­ளா­தார மாதி­ரிகள் என்­ப­னவற்­றுக்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தினர்.  

இதேவேளை மாநாடு இடம்பெற்ற பிராந்­தி­யத்தில் பாது­காப்பு செயற்கி­ர­மங்­களை  முன்­னெ­டுக்கும் செயற்­பாட்டில் பெருந்­தொகை  பாது­காப்புப் படை­யினர் ஈடு­பட்­டனர். ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்ற பிராந்­ தி­யங்­க­ளுக்கு மேலாக உலங்­கு­வா­னூர்­தி கள் வட்­ட­மிட்ட வண்ணம் இருந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்றைய தினம்  முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஈரான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டார்.

ஈரான் - அமெரிக்க இடையே அதிக பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த மாநாட்டில் ஈரான் அமைச்சர் கலந்து கொண்டிருப்பது, அமெரிக்க அதிகாரிகளை வியக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதியோடு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாக இரான் வெளியுறவு அமைச்சர் சாரிஃப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2015 இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்தாண்டு அமெரிக்கா விலகியதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.