வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று (25.08) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,  

செட்டிகுளத்திலிருந்து மெனிக்பாம் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி கல்லாறு பாலத்திற்கருகில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டையிழந்து அருகிலுள்ள மின்சார கம்பத்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் முச்சக்கரவண்டியில் பின்னிருக்கையில் இருந்து சென்ற மெனிக்பாம்  பகுதியை சேர்ந்த சுரேஸ் ஜீவானந்தம் (வயது 29)  என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதேபகுதியை சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.