இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் நியூஸிலாந்து அணி 138  ஓட்டத்தினால் முன்னிலையில் உள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 22 ஆம் திகதி கொழும்பு, சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் ஆரம்பமான இப் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸுக்காக 90.2 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 244 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டிசில்வா 109 ஓட்டத்தையும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 65 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் நியூஸிலாந்து அணிசார்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களையும், டிம் சவுதி 4 விக்கெட்டுக்களையும், கிரேண்ட் ஹோம், வில்லியம் சோமர்வில் மற்றும் அஜஸ் படேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

இதன் பின்னர் நேற்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி நேற்றைய மூன்றாம் நாள் நிறைவில் 62 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது.

இதனால் இலங்கை அணியை விட 48 ஓட்டத்தினால் நியூஸிலாந்து பின் தங்கியிருந்தது.

இதன் பின்னர் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை 196 ஓட்டத்துடன் ஆரம்பித்த நியூஸிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 382 ஓட்டங்களை குவித்துள்ளது.

இதன் மூலம் நியூஸிலாந்து அணி இலங்கை அணியை விட 138 ஓட்டத்தினால் முன்னிலையில் உள்ளது. நியூஸிலாந்து அணி சார்பில் ஜீத் ராவல் டக்கவுட்டுடனும், டோம் லெதம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 154 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் 20 ஓட்டத்துடனும், ரோஸ் டெய்லர் 23 ஓட்டத்துடனும், ஹென்றி நிக்கோலஷ் 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், பி.ஜே. வோட்லிங் 81 ஓட்டத்துடனும், கிராண்ட்ஹோம் 83 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றுவான் பெரேரா 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார, லசித் எம்புலுதெனிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

நாளை போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் ஆகும்.