(இராஜதுரை ஹஷான்)

தவறான அரசியல் தீர்மானங்கள் மற்றும் தவறான பொருளாதார அபிவிருத்தி மையங்கள்  நிர்மாணிப்பு ஆகியவற்றை கடந்த அரசாங்கம் தமது தேவைக்காக நிறைவேற்றியமையின் விளைவினையே நாடு இன்று எதிர்க் கொள்கின்றது. ஆனால் தற்போது அனைத்தும் அரசியல் தேவைகளுக்காக மறக்கப்பட்டுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

யக்கலமுல்ல பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற  நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளின் காரணமாகவே  பல நெருக்கடிகள் இன்று நாட்டுக்கு  ஏற்பட்டுள்ளன. தவறான இடத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பல்கள் எவையும் துறைமுகத்திற்கு வருவதில்லை. ஒரு நாளைக்கு காலி துறைமுகத்தினை கடந்து 200ற்கும் அதிகமான கப்பல்கள் செல்கின்றன. ஆனால் எவையும்  காலி துறைமுகத்தில் தரிப்பதில்லை.

தென் மாகாணத்தில் விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. விமானங்கள் வருகை தராததினால்  இன்று  மத்தள விமான நிலையம் பயனற்றதாகியுள்ளது. தவறான இடத்தில் முக்கிய நிர்மாணங்களை முன்னெடுத்தமையின் விளைவே இன்று   நாட்டுக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய நெருக்கடியாக காணப்படுகின்றது என்றார்.