அரசியல் பழிவாங்கலுக்காகவே  சிவமோகன் என் மீது குற்றம் சாட்டுகின்றார் ; சாந்தி 

By T Yuwaraj

25 Aug, 2019 | 05:13 PM
image

ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளரினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உங்கள் மீது காணி சம்பந்தமான சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றார். அது தொடர்பான விசாரணைகளும் தமிழரசு கட்சி மட்டத்திலே இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சியை மட்டத்தில் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டத்திலேயே மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற  தலைவர்களை ஒரு குழுவாக அமைத்து பாராளுமன்ற உறுப்பினர் இருவரையும் விசாரிக்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையிலே அவரால் கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறாக நான் காணி அபகரிக்கவும் இல்லை. காணியை களவாக பிடிக்கவும் இல்லை. அதற்குரிய சகல ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றது. அந்த காணிக்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது. அது எனது கணவரின் தந்தையாருக்கு சொந்தமான காணி. அந்த காணியிலே எனது கணவர் 40 வருடங்களாக வயல் செய்கின்றார், தோட்டம் செய்கின்றார். 

ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது.  இதனுடைய விசாரணைகளின் முடிவில் அரசாங்க அதிபர்  எழுத்து மூலமாக எனக்கு அறிவித்திருக்கிறார். இது கையகப்படுத்தப்பட்ட காணி அல்ல பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்த போர்வையிலேயே நான் இந்த காணியை கையகப்படுத்தவில்லை. எனது கணவருக்கு அது சொந்தமான காணி என்பதை எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றார்.

விசாரணைகளின் முடிவில் இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என  மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right