(செ.தேன்மொழி)

புத்தளம் - அருவக்காலுவுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மற்றும் அதன் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தில்லடி பகுதியில் வைத்து குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி  மீதும் பாதுகாப்பிற்காக சென்ற  பொலிஸ் வாகனத்தின் மீதும் நேற்று அதிகாலை கற்களால் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் - தில்லடி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நாலக பிரசன்ன என்பவரே இவ்வாறு கைது செயற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக பொது சொத்துகளை சேதம் படுத்தியமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பொலிஸார் சந்தேக நபரை புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதுவரையில் அருவக்காலு குப்பை சேர்க்கும் இடத்திற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற 20 க்கும் அதிகமான லொறிகள் மீது கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.