ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டுத் தலைர்வகள் பிரான்சில் கூடியுள்ளனர். 

பிரான்ஸ் நாட்டை அண்டியுள்ள பிஸ்கே விரிகுடா பகுதியில் அமைந்துள்ள பையாரிட்ஸ் என்ற இடத்தில் 45 ஆவது ஜி - 7 உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. 

மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், அந்நிய வர்த்தகத்தில் சுதந்திரங்கள், பாதுகாப்பு, பாலின பாகுபாடு போன்றவற்றை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. 

அத்துடன் அமேசான்  காட்டுத் தீ பற்றி எரிந்தது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் விவாதிக்க திட்டமிட்டுள்ளார். இது சர்வதேச பிரச்னையாக அறிவிக்கப்பட இருக்கிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜி-7 மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து தடுக்க நகரம் முழுவதும் ஹைட்ரஜன் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கார்பன்-டை-ஆக்சைடை குறைவாக வெளியேற்றும் இந்த ஹைட்ரஜன் பைக்களை பயன்படுத்த செய்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் மாநாட்டையொட்டி சில கவன ஈர்ப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. பையாரிட்ஸ் நகரில் இயங்கிவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற Monsanto எனப்படும் ரசாயண உரம் தயாரிக்கும் தொழில்சாலையை மூட வேண்டும் என்ற போராட்டம் வலுத்துள்ளது. விவசாய நிலங்கள் தொழிற்சாலையாக மாற்றப்பட்டு வருவதை எதிர்க்கும் விதமாக சாலையில் மணலைக் கொட்டி செடிகளை நட்டனர். போராட்டம் தொடரும் என்பதால் பையாரிட்ஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.