சீகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இனாமலுவ இராணுவ முகாமில் பணிபுரிந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சீகிரியா - இனாமலு இராணுவ முகாமில் தோட்ட வேலையில் ஈடுப்பட்டிருந்த சிப்பாய் ஒருவர் நேற்று மாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக சீகிரியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஊவ பரணகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மஹா ஆராச்சிகே அஷங்க உதயகுமார எனப்படும் சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவத்தின் போது குறித்த சிப்பாய் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.