‘இன்று  தலைநகரில்  தொழில் புரிந்து வரும் இளைஞர்களில் 90 வீதத்துக்கும் மேற்பட்டோர்  பல்வேறு காரணங்களுக்காக பாடசாலை இடைவிலகளுக்கு முகங்கொடுத்தவர்களாகவே இருந்து வருகின்றனர். அதற்கு வறுமை ஒரு பிரதான காரணமாக இருக்கின்றது. 

நாமும் அப்படியான இடை விலகல்களினால் தலை நகர் வந்து இன்று ஒரு தொழிலில் எம்மையும் இணைத்துக்கொண்டுள்ளோம். நாம் பட்ட துன்பங்களை எமது சமூகத்தின் அடுத்த தலைமுறையினர் அனுபவிக்கக் கூடாது என்ற காரணத்தினாலும் எமது சமூகத்தின் உயர்ச்சிக்கு கல்வியே ஒரே வழி என்பதால் அதை உரிய வழிகளில் பெற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டதே மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்’ என  மன்றத்தின் தலைவர் முத்துசாமி தேவராசன் தெரிவித்தார். 

மன்றத்தின் 13 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மன்றம் ஆற்றி வரும் சேவைகள் எதிர்கால திட்டங்கள் சவால்கள் குறித்து வீரகேசரிக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் , செயலாளர் ,பொருளாளர் ஆகியோர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகின்றன.

கல்விக் கண் திறப்போம்

‘கல்விக்கண் திறப்போம் கற்போருக்கு கரம் கொடுப்போம்’ என்ற மகுட வாசகத்துடன் எந்த நோக்கத்துக்காக எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதோ அதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்ற ஆத்ம திருப்தியிலேயே செயற்பட்டு வருகிறோம்.  எமது மன்றத்தின் போஷகர்கள் ,அங்கத்தவர்கள் ,கடந்த காலத்தில் நிர்வாகத்தை வெற்றிகரமாக கொண்டு நடத்தியவர்கள் ,எமக்கு ஆதரவு நல்கி வருபவர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். 

இது சமூக அக்கறையுடன் அர்ப்பணிப்பு ,தியாகம் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்.  மலையக சமூகத்தின் பிரச்சினைகள் பல உள்ளன. பொருளாதாரம் பிரதான பிரச்சினையாக உள்ளது. இன்று மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தலைநகர் நோக்கி படையெடுத்த இளைஞர்களை கேட்டால் வறுமையையே காரணங்காட்டுவர். அதன் காரணமாக பாடசாலை கல்வியை இடை நடுவில் விட்டுச்சென்றவர்கள் தான் இன்று கொழும்பில் வர்த்தக சாம்ராஜ்யங்களை ஆள்பவர்களாக இருக்கின்றனர். 

பலர் தொழில் அதிபர்களாக விளங்குகின்றனர். ஆனால் இப்போதும் கூட மலையகத்தில் இடைவிலகல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கல்வி உதவிகளை வழங்குவதற்கே வர்த்தக சமூகத்தினர் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கினார்கள்.

எழுச்சி கண்டுள்ள வளர்ச்சிப்படிகள்

ஆரம்பத்தில் மன்றத்தினால் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்களை விநியோகித்தல் ,வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல் ,பாடசாலைகளுக்கு வகுப்பறைகளை அமைத்துக்கொடுத்தல் , புனரமைத்தல் போன்ற விடயங்களை எமது அமைப்பு முன்னெடுக்கின்றது. இது எமது அமைப்பின் வளர்ச்சிப்போக்கினை எடுத்துக்காட்டுகிறது. 13 வருடங்களுக்கு முன்பு 30 பேரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 3500 இற்கும் மேற்பட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.

எங்களால் முடிந்த உதவிகளை வழங்குகின்றோம்

 ஊவா ,மத்திய,சப்ரகமுவ மாகாணங்களில் சுமார் 800 இற்கும் மேற்பட்ட மலையக பிரதேச பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் மாணவர்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றோம். நாம் எவ்வித அரசியல் தலையீடின்றியும் சமூக சேவையாற்றி வரும் அமைப்பினர். அதே வேளை கட்சி ,தொழிற்சங்க பேதமின்றி எமது சேவைகளை பாராட்டி வரும் அரசியல் பிரமுகர்களும் இருக்கின்றனர். 

ஆனாலும் நாம் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியாக உதவிகளை எதிர்பார்ப்பதில்லை. இருப்பினும் மலையக சமூகத்துக்கு அரசியல்ரீதியாக குறிப்பாக கல்வித்துறை வளர்ச்சிக்கு இன்னும் பங்களிப்புகள் தேவை என்பது தான் உண்மை. இதை உரியோர் புரிந்து செயற்பட வேண்டும்.

எமக்கு வரும் கடிதங்கள்

எமது உறுப்பினர்கள் வழங்கும் மாதாந்த உதவித்தொகையினால் மட்டுமே நாம் சேவைகளை முன்னெடுத்து வருகிறோம். மட்டுமன்றி அமைப்பின் போஷகர்கள், மற்றும் உறுப்பினர்கள் சில திட்டங்களுக்கு நிதியை தாராளமாக வழங்குகின்றனர். தமது கல்வியைத் தொடர்வதற்கு புலமை பரிசில் கேட்டு எமக்கு கடிதம் எழுதுவோரின் கதைகளை படித்தால்  வேதனையாக உள்ளது. 

சிலர் குடும்ப வறுமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். பலர் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் அல்லது நிரந்தரமான வருமானம் இன்றி தவிப்பவர்கள். உயர்தரம் முடித்தவர்கள் தமது கல்வியை பூர்த்தி செய்யவும் அதே வேளை பல்கலைக்கழகத்திற்கு தெரிவானோர் பட்டப்படிப்பை முடிக்கவும் எமது உதவியை எதிர்நோக்கியுள்ளனர். நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து கடிதங்களாவது வருகின்றன. ஆனால் இவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய எமக்கு மனமிருந்தாலும் அதற்கான நிதி வளம் குறைவாகவே உள்ளது.

தற்போது வருடத்துக்கு 150  மாணவர்களுக்கு  கற்பதற்கான  நிதி உதவி வழங்கி வருகிறோம். அதை 250 மாணவர்களுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கிறோம். ஆனால் அதற்கான நிதி உதவிகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து திட்டங்களை வகுத்து வருகின்றோம்.

உறுப்பினர்களின் பங்களிப்பு

தற்போதைய பொருளாதார நிலைமைகளை அனைவரும் அறிவர் இருப்பினும்  எமது உறுப்பினர்கள் முகஞ்சுழிக்காமல் தமது பங்களிப்பை அமைப்புக்கு செய்து வருகின்றனர். வர்த்தகர்கள் முதல்  கூலித்தொழில் செய்பவர்கள் கூட தமது சமூகத்தை நினைத்து பங்களிப்பு செய்யும் அமைப்பு இது என்பதை அனைவரும் அறிவர் . அந்த வகையில் உணர்வு பூர்வமான இந்த சமூக அக்கறைக் கொண்ட அமைப்பை மேலும் கட்டியெழுப்புதல் எமக்கு அவசியமாகவுள்ளது. எனினும் கடந்த 13 வருடங்களாக இத்தகைய பங்களிப்புகளை பல சவால்களுக்கு மத்தியில் செய்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நாம் எந்த வகையில் நன்றி கூறுவதென்றே தெரியவில்லை.

எதிர்கால செயற்திட்டங்கள்

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பல வருடங்களாக இலவச பரீட்சை வினாத்தாள்களை விநியோகித்து வருகிறோம். அதே போன்று தற்போது சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு விசேட பயிற்சி வகுப்புகளை மலையக பாடசாலைகள் முழுதும் முன்னெடுக்க ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். 

அது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். மட்டுமன்றி நாம் மலையகத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என்றாலும் நாடு பூராகவும் எமது சேவைகளையும் பணிகளையும் விஸ்தரித்து வருகிறோம். குறிப்பாக தரம் ஐந்து புலமை பரிசில் வினாத்தாள்களை கோரி எமக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வருகின்றன. அந்த பாடசாலை மாணவர்களுக்கும் அவற்றை அனுப்பி வைக்கின்றோம். அதில் எமக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை.

பங்களிப்புகளை அதிகரித்தல்

இதே வேளை எமது அமைப்பை பொருளாதார ரீதியில் இன்னும் வலுப்படுத்துவதற்கு நாம் உதவிகளை எதிர்பார்த்துள்ளோம். இலங்கையில் குறிப்பாக தலைநகரில் உள்ள வர்த்தகர்களை மாத்திரமே நம்பி நாம் இவ் அமைப்பை கொண்டு செல்கிறோம். அதே வேளை மலையகத்தின் நகர்புறங்களில் உள்ளவர்களும் எம்மோடு இணைந்து தமது சமூகத்திற்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும். 

மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மலையக சமூகத்தை சேர்ந்தவர்களிடமிருந்தும் நாம் உதவிகளை எதிர்ப்பார்க்கிறோம்.  ஐரோப்பிய நாடுகளில் எமது சமூகத்தினர் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். மட்டுமன்றி நாம் சமூகத்துக்கான ஒரு அமைப்பை ஆரம்பித்த பிறகு தலைநகரிலும் மலையக பிரதேசங்களிலும் சமூகம் சார்ந்த பல அமைப்புகள் உருவாகியுள்ளதை எண்ணி மகிழ்ச்சியுறுகிறோம். ஏதாவதொரு வகையில் எமது சமூகத்துக்கு உதவிகள் சென்றடைந்தால் ஆறுதலே.

14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள எமது சமூகத்துக்கு பல்வேறு வழிகளில் ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும்  தந்து வரும் வர்த்தக சமூகம்,கல்வி சமூகத்தினர் மற்றும் ஊடக நிறுவனங்கள் ,நலன் விரும்பிகள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.