எங்கள் உயிர் இருக்கும் வரை பிரேசிலின் அமேசன் காட்டினை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என  பிரேசிலி;ன் முரா பழங்குடி இனத்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரேசிலின் முரா பழங்குடியினத்தவர்கள் தங்கள் உடல்களில் நிறங்களை தீட்டியவாறு அம்பு மற்றும் ஏனைய ஆயுதங்களுடன்  காடுகளை அழிப்பவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரேசிலின் அமேசன் மழைக்காடுகள் அமோஜோனஸ் மாவட்டமாநிலத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முரா பழங்குடியினத்தவர்கள் வாழ்கின்றனர்.

முரா பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கிராமங்களை அண்டிய பகுதிகளில் இடம்பெற்றுள்ள பாரிய காடழிப்புகளை ரொய்ட்டர் செய்தியாளரிடம் காண்பித்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் நாங்கள் காடுகள் அழிக்கப்படுவதையும் மரங்கள் வெட்டப்படுவதையும் ஆக்கிரமிப்பையும் பார்க்கின்றோம் அழிவு நெருங்கிவருவதை காண்கின்றோம் என பழங்குடியின தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நிமிசத்திலும் காடு மரணத்தை தழுவுகின்றது இது குறித்து நாங்கள் கடும் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாறுவதாக நாங்கள் உணர்கின்றோம் உலகிற்கு காடுகள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முரா கிராமத்திற்கு அருகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காடுகள் தீப்பற்றி எரிவதை காணமுடிகின்றது என சர்வதேச செய்தி சேவை தெரிவி;த்துள்ளது.

மரங்களை சட்டவிரோதமாக தறிப்பவர்கiளை எங்களால் தடுக்க முடியவில்லை,என தெரிவிக்கும் பழங்குடியின மக்கள் கடந்த நான்குவருடத்திற்கு முன்னரே இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என குறிப்பிடுகின்றனர்.

தங்கள் நிலத்தை அழிப்பவர்களிற்கு எதிராக போராடபோவதாக முரா இனத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது வாழ்க்கை முழுவதும் தனது மண்ணிலேயே வாழ்ந்துள்ள 73 வயது ரைமுண்டோ முரா இறுதிவரை போராடப்போவதாக தெரிவிக்கின்றார்.

இந்த காட்டிற்காக எனது கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்த தயார் என அவர் தெரிவித்துள்ளார்.