தனது பெயருக்கு களங்கம் விளைவித்த இணையத்தளங்கள் மீது சி.ஐ.டி யில் செல்வம் முறைப்பாடு

Published By: Digital Desk 4

24 Aug, 2019 | 04:09 PM
image

பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார் என்ற ஆதாரமற்ற செய்தியினை பகிர்ந்தமை தொடர்பில் சில இணையத்தளங்களுக்கு எதிராக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் (24) முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,

ஆதராமற்ற உண்மைக்கு புறம்பான குறித்த செய்தியை வெளியிட்ட இணையத்தளங்களுக்கு  குற்ற புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளேன்.

 இதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்குமான வழக்கு தொடர்தலின் முதற்கட்டமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன்.

இது தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

 அவர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இதனுடன் தொடர்புடையவர்களை இன்டர்போல் ஊடாக கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக குற்றவிசாரணைப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் இணையத்தளங்களை நடாத்தும் நபர்கள் வசிக்கும் நாடுகளின் தூதரகங்களுக்கும் அறிவிக்குமாறு குற்ற புலனாய்வு திணைக்கதிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பும்  செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை புலம்பெயர் நாடுகளில் இருந்து நடத்தும் பண முதலைகள்  இராணுவ புலனாய்வுத்துறையினரின் கோரிக்கையில் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டு வருகின்றனர்.

 மக்களால் தெரிவு செய்யப்பட்ட  பிரதிநிதளுக்கெதிராக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இத்தகையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி இவர்களின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமாகும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்