உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தயாராகிவரும் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து முன்னணி இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியிருக்கிறார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவிக்கையில்  ,‘ ஆம். இந்த செய்தி உண்மைதான். நான் அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன். அவர்கள் கேட்ட திகதியில் எம்மிடம் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இது குறித்து விரிவாக அவர்களிடம் எடுத்துரைத்து படத்தில் இருந்து விலகி இருக்கிறேன். 

உண்மையில் எனக்கு கடினமாகவே இருந்தது. பிரம்மாண்ட இயக்குனர் மற்றும் உலக நாயகனுடன் இணைந்து பணியாற்ற கனவு கண்டிருந்தேன். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். மீண்டும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்.” என்றார்.

ஆனால் இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்த பொழுது,‘ ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படவில்லை என்றும், ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற கஸ்தூரி தொடர்பான கேரக்டரில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், இதனால் அதில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, விஜய் சேதுபதி நடிக்கும் க/ பெ ரணசிங்கம், மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’,  சிவகார்த்திகேயன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ மற்றும் வெற்றிமாறன்= தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘வடசென்னை =2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.