ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வந்த 210 யூடியூப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து யூடியூப் வலைத்தளத்தின் உரிமையாளரான கூகுள் நிறுவனத்தின் இணையதள பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஷேன் ஹன்ட்லி கூறியதாவது:

ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து பல்வேறு விடியோக்களை வெளியிட்டு வரும் 210 கணக்குகள், அந்தப் போராட்டங்களுக்கு எதிரான கருத்துகளை ஒருங்கிணைந்து பரப்பி வருவதைக் கண்டறிந்தோம். அதையடுத்து, அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டன.

சீன விவகாரம் குறித்து முகநூல் மற்றும் சுட்டுரை (டுவிட்டர்) நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஏற்ப, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

முன்னதாக, ஹொங்கொங் போராட்டத்தை திசைத் திருப்பும் முயற்சியில் ஒருங்கிணைந்து ஈடுபட்ட சுமார் 1,000 பயனாளர்களின் கணக்குகளை முடக்கியதாக முகநூல் மற்றும் சுட்டுரை வலைத்தள நிறுவனங்கள் அறிவித்திருந்தன. ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 2 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஹொங்கொங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் பதவி விலக வேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.