யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி   (O.M.P)  அலுவலகம் திறப்பதை உடனடியாக நிறுத்த கோரி வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி திருமதி கலாறஞ்சினி கொழும்பு காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை(23) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,

கடந்த 16.05.2019 கலந்துரையாடியதற்கு அமைவாக உறுதிப்படுத்தும் சாட்சியமுள்ள காணாமல் ஆக்கப்பட்ட ஐந்து நபர்களின் விபரங்களை தரும் பட்சத்தில் அவற்றை தாம் தேடிக்கண்டு பிடிப்பதாக எம்மிடம் நீங்கள் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க  சாட்சியமுள்ள ஐவரின் விபரங்கள் தங்களுக்கு தந்துள்ளோம்.

 அவற்றுக்கு இதுவரை எதுவித பதிலும் இல்லாத சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 24.08.2019 அன்று ஓ.எம்.பி (O.M.P) அலுவலகம் திறக்க முற்படுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான உங்களின் கைங்கரியமே.இவ்விதமாக பாதிக்கப்பட்ட தரப்பை ஏமாற்றும் உங்கள் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

குறித்த சாட்சியமுள்ள ஐந்து நபரையும் தேடித் தீர்வை பெற்றுத் தந்து விட்டு வட கிழக்கில் அலுவலகம் திறப்பதே ஏற்புடமையாகும். ஆகவே இவ் அலுவலகம் திறப்பதை நிறுத்துமாறு தங்களை கேட்டுக்கொள்வதுடன் அவ்வாறு எமது கோரிக்கைக்கு மாறாக திறப்பீர்களாயின் எமது உறவுகள் திரண்டு போரட்டம் நடத்துவோம் என்பதையும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 எனவே எந்த விதமான சட்ட அந்தஸ்து அற்ற ஓ.எம்.பி யின் செயற்பாட்டை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தொடர் தேர்ச்சியான போராட்டம் மூன்று வருடங்களை அண்மித்த போதும் இதுவரை தாங்களோ, அரசாங்கமோ, மனித உரிமை ஆர்வலர்களோ, பன்நாட்டு தூதரங்களோ, இதுவரை எமக்கு நேசக்கரம் நீட்டவில்லை.

 நூற்றுக்கணக்கான போரட்டங்களையும் நடத்திவிட்டோம். போரட்டக்கழத்தில் முப்பதிற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் விட்டனர்.

கண்துடைப்பிற்காக ஆறாயிரம் ரூபாய் வழங்கி எம்மை ஏமாற்ற வேண்டாம்.வரும் செப்ரம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட முனைகிறீர்கள்.

 அரசியல் ஆதாயத்திற்காக நாம் போராடவில்லை. எமது பிள்ளைகளை தேடியே நாம் போராடுகிறோம்.அரச தரப்பிடம் ஒப்படைத்த எமது பிள்ளைகளையே தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களால் எதற்கு யாழில் அலுவலகம்.

 ஆகவே தயவு கூர்ந்து எமது வேண்டுகையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தங்களின் போலிச் செயற்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தயவாக அறியத்தருகின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.