கடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசு, சூழலியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலுக்கு அடியில் காணப்படும் சில வகையான பவளப்பாறைகள் அழிவை சந்தித்து வருகின்றன. இதனை பாதுகாக்கவும், பவளப்பாறைகளை செயற்கை முறையில் வளர்த்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர்.

இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு, லண்டன் அருங்காட்சியகம் ஒன்றின் உதவியுடன் புளோரிடா மாநிலத்தில் உள்ள தம்பா பகுதியில் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்கினர். இந்த ஆய்வகத்தில், கடலுக்கு அடியில் இருப்பது போன்ற சூழலியலை உருவாக்கும் வகையில் நீரின் வெப்பம் கண்காணிக்கப்பட்டது.

மேலும், சூரியன் தோன்றி மறைவதற்கு ஏற்ப பிரத்யேக விளக்குகள் அமைத்து ஒளி ஏற்படுத்தப்பட்டது. தற்போது, அந்த ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு வந்த விரல் வடிவிலான ‘பில்லர்’ பவளப்பாறைகள் இனப்பெருக்கம் மூலம் மேலும் பல பவளப்பாறைகளை முளைக்கச் செய்துள்ளது. 

தங்களது ஆய்வு முயற்சி வெற்றி அடைந்ததால் மகிழ்ச்சியடைந்துள்ள ஆராய்ச்சியாளர்கள், “அழிவின் விளிம்பில் உள்ள கடல் உயிரினமான பவளப்பாறைகளை பாதுகாக்க முடியும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்