(நா.தினுஷா)

என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சேவை இருநாள் நடமாடும் சேவையாக இடம்பெறவுள்ளதோடு நாளைய மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரும்.

  

தம்புள்ளை பெல்வெஹெர விவசாயக் கல்லூரியில் இடம்பெறும் இந்த சேவை காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5.00 மணி வரை நடைமபெறும். நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில், நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன பிரதம அதிதியாகக் கலந்துக்கொள்ளவுள்ளார்.

என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினூடாக ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கிலும் நிதியமைச்சினால் துரிதமான விரிவாக்கப்பட்ட ஒரு செயற்திட்டமாகவும் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு அடிப்படை மூலதனத்தைப் பெற்றுக்கொடுப்பதே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது  வியாபாரம் ஒன்றை அல்லது கைத்தொழில், விவசாய நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் நபர்களுக்கு, வங்கி மூலம் மூலதன நிதியை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் இங்கு பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.