(எம்.எம்.சில்வெஸ்டர்)

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்துக்காக நேற்றிரவு இலங்கை வந்த சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தலைவர் ஷஷாங் மனோஹர், இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.

இந்த சந்திப்பின்போது விளையாட்டுத்துறை அமைச்சர், அமைச்சின் செயலாளர் சூலாநந்த பெரேரா, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா, ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஐ.சி.சி. தலைவர் ஷஷாங் மனோஹரை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்தியாவின் நாக்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஐ.சி.சி. தலைவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்த விஜயத்தில், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் மற்றும் நிதி, தொலைக்ககாட்சி உரிம குளறுபடி, கொழும்பு நகருக்கு வெளியே ஹோமாகவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நிர்மாணிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்யொன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.